மாக்கவி தமிழ்போல் வாழ்க ! சிலேடைச் சிகரம் உவமைப்பித்தன் உதடுகள் புணர்ச்சி யாலே உவமைகள் பூப்ப தில்லை ! மதியொடு மனமும் சேர்ந்தே மனையறம் படுத்தும் போழ்தில் உதிக்கின்ற கருத்து விந்தே உவமையாய்க் காலம் தாங்கும். கொதிப்பானை குடத்தில் துள்ளும் குரவைமீன் சோறே யாகும் ! உவமையின் துள்ள லோடு உணர்ச்சியின், உருவ கத்தின் நவகவி துள்ளும், இந்த நன்னூலே பொன்னூ லாகும். எவரெவரோ இஸ்லாம் பற்றி இமயமாய் எழுதி னாலும், * உவரியின் உவமை முன்னே ஓடையாய்க் குறுகக் கண்டோம் ! இதிகாசம் இடம்பெ யர்ந்தே இவர்விரல் தவம்கி டந்து மதிகாசம் ஆனோ ருக்கும் மதம்காசம் ஆனோ ருக்கும் அதிமதுர மாம ருந்தாய் அளித்திட்ட ஜானாம், இந்த நதிதேடி கண்ட ஆழி, நபியெனும் ஆழி யாகும் ! விரல்களின் இடுக்கில் கூட வேற்றுமை செடிமு ளைக்கா உரிமையை உரக்கச் சொன்ன ஒருமதம் பற்றி ஆய்ந்த விரல்களின் நாட்டி யத்தை விண்வெளி செயற்கைக் கோளம் தருகின்ற செய்தி போல தமிழ்க்கவி நூலாய்த் தந்தார் ! சிப்பியில் விழுந்த தாரை சிலநொடி சீக்கி ரத்தில் கப்பிய கிளிஞ்சல் மூடி காயமே பெறுவ தில்லை ! முப்பது திங்கள் மேலும் மூழ்கியே எடுத்த முத்து, இப்போழ்தில் இமய மாகி எழுந்துமே நடக்கக் கண்டோம் ! மதுரையோ இடத்தை மாற்ற மற்றொரு சங்கம் கண்டே பதத்திற்குக் கால்மு ளைத்தப் பரதத்தைத் தமிழில் கண்டோம் ! சுதிதேடி வருகை தந்து சோபிக்கும் பாடல் போல, மதம்தேடி ‘ஆய்ந்த’ இந்த மாக்கவி தமிழ்போல் வாழ்க ! * வலம்புரியார் பிறந்த ஊர் (நெல்லை மாவட்டம்) உவரி - கடல். |