பக்கம் எண் :

78 வலம்புரி ஜான்


அன்னை மடியில் அண்ணல் !  

 

O

 

தாழக்குடை பிடிக்கும்

தளிர்ப்பச்சை மரங்களின் கீழ் -

வெட்ட வெளிப்பொட்டல்களின்

வேதாந்த வெண்மணலில் ...

செயற்கைக்கு இடம் இல்லா

ஊர்க்கோடி நதிக்கரையில் ...

பூவரச மர இலையில்

புல்லாங்குழல் இயற்றி ...

மத்தளமும் குழலும்

உதடுகளில் ஊர்ந்து வர ...

ஆடு நடத்தும் சிறுவர்களை

அள்ளிடுவேன் கண்களிலே ...

நபிமார்கள் செய்த தொழில்

நாளெல்லாம் இயற்றுகின்ற ...

கோவலரே உங்களுக்குக்

கும்பிடுநான் போடுகின்றேன் !

 

O

 

ஒரு நாள் முகம்மது

ஆடு மேய்த்திட

அடிவாரம் போனார்.

ஹலீமாவின் குழந்தைகள்

கிடைக்கு ஒன்றாய் கிடந்தனர் !