பஞ்சணை கேட்பப் பாறையைக் காட்டலும் நஞ்சினைக் கொடுத்து நல்லமு தென்பதும் தக்கதே யாயின் தக்கதே இதுவும் மிக்கதா யிருப்பினும் விரும்பிடாப் பொருளை வாழ்நாள் முழுதும் வைத்தே காக்க ஊழ்வினை கூறினும் ஒப்பிடார் சுலைகா. எனவே அவரை இனிதே நெருங்கிக் கனவே காட்டிய காந்தனின் வடிவை உரைத்திடக் கேட்டு உவந்த அழகனை வரவழைத் திடவே வழிவகுத் திடுவோம்" கவிஞன் கூறிய கருத்துகள் ஏற்றுக் குவிந்த முகத்துடன் கூறினான் அரசன். "பன்முறை கேட்டும் பார்த்தவன் வடிவை என்மகள் சுலைகா இயம்பிட வில்லை ‘அத்தனை அழகும் அமைந்தவ’ னென்று மொத்தமாய்ச் சொல்லி நித்தமும் அழுகிறாள். இத்தரை முழுவதும் சுற்றித் தேடினும் அத்தகைக் குறிப்பினால் அறிந்திட லாகுமா?" மன்னர்சொற் கேட்டதும் மந்திரி கூறுவார் "என்னதான் அழகனாய் இருப்பினும், கிடைப்பினும் பிறப்பும் வளர்ப்பும் பெயரும் ஊரும் சிறப்பும் தகுதியும் தெரியா ஒருவனை நாட்டின் அரசியின் நாயக னாக்குதல் கேட்டினில் முடியும், கேட்பவ ரெல்லாம் எள்ளியே நகைப்பர்! ஏனைய மன்னர் சொல்லியே வெறுப்பர்! சுலைகா கொள்ள |