பக்கம் எண் :

102


விரும்பிய வேந்தர் வெகுவாய்ப் பகைப்பர்,  

பெரும்பிழை என்றே கருதுவர் மக்கள்!

கனவினில் கண்ட காரணத் திற்காய்

மணவினைக் கொப்புதல் மாபெரும் தவறே

அழகையே நம்பி அரசியைக் கொடுத்தல்

அழகிடம் நாட்டை ஆளக் கொடுப்பதே!

அறிவும் அழகும் ஆளுந் திறனும்

பரிவும் அரசப் பரம்பரை யாயும்

இளவர சொருவரை இனிதே தேர்ந்தே

இளவர சியினை ஈவதே கடமை!"

அடுக்கடுக் காக அமைச்சர் உரைப்பதைக்

கடுகடுப் பாகக் கவிஞன் கேட்டுக்

குறுக்கே தடுத்துக் கூறிட லானான்.

"மறுப்பதைப் பெருமையாய்மதித்தே அமைச்சரின்

கருத்தை எதிர்ப்பதாய்க் கருதிடீர்! என்னுடைக்

கருத்தைச் சொல்வது கடமை ஆதலால்

பயனை மறந்து பகரத் துணிகிறேன்,

தவறாய்க் கருதிடில் தள்ளியே செல்லுவீர்.

எவராய் இருப்பினும் தவறாய் உரைத்திடில்

மறுப்பதே நெறியாம் மந்திரி வார்த்தையான்

மறுப்பதைப் போலென் வார்த்தையை மறுக்கவும்

ஒப்புவேன்! ஐயம் உதித்தால் விளக்கம்

செப்புவேன்!" என்று சிறிது நிறுத்தினான்.

"இப்படி அப்படி எப்படிப் பேசினும்

ஒப்பிடத் தக்கதாய்ச் செப்பிடில் ஏற்றிடத்

தயங்கேன்!" என்று சாற்றினார் தைமூஸ்

"மயங்கேன்" என்று மந்திரி கூறினான்.