அடுத்தொரு வழியினை அமைத்திட எண்ணுவோம் தொடுத்திடும் முயற்சியில் தோல்விமேல்தோல்வியே கிடைப்பினும் வெற்றியே கிட்டிடும் வரையிலும் தடைகளைத் தகர்த்திடத் தக்கது செய்யலாம் இளவர சியின்மனம் ஏற்றிடும் முறையினில் இளவரச ரொருவரை இயம்புவீர்" என்று புலவரை நோக்கிப் புகன்றனர் அமைச்சர். "நலமிதே" என்று நவின்றனர் தைமூஸ் "ஒருக்கால் அவரே உண்மையில் சுலைகா விரும்பிடு வோராய் இருப்பினும் இருக்கலாம் அழகிலும் அறிவிலும் ஆண்டிடும் திறனிலும் பழகிடும் பண்பிலும் பரம்பரைச் சிறப்பிலும் உயர்ந்தவ ரொருவரை உரைப்பீர்" என்று தயவுடன் வேண்டினார் தைமூஸ் மன்னர். ‘ஷாம்’ அதிபதிக்கும் ‘ரூம்’அதி பதிக்கும் நாம்ஒரு அழைப்பினை நல்குவோம் இன்றே. வருவார் இருவரும்; வந்தபின் அவர்களில் ஒருவரைத் தேர்ந்திட உறுதியாய்க் கூறுவோம். மறுத்திடில் மறுவழி வகுத்திட லா மெனக் கூறினார் அமைச்சர்; கொற்றவர் மகிழ்ந்து சீரிய முறையிதைத் தேர்ந்தஎன் அமைச்சரே! கோரிய பலனிதில் கூடினும் கூடலாம் காரியம் முடிப்பதைக் கடமையாய்க் கொள்ளுவீர்" என்றதும் தைமூஸ் இடப்புறம் திரும்பி நன்றுதா னேஇது நவிலுவீர்" என்று புலவரை நோக்கினார், புலவர் பேசினார்: "நலமாய் முடிந்தால் நன்மையே ஆகும் |