ஒருவரைத் தேர்ந்துமற் றொருவரைத் தள்ளினும் இருவரும் ஒப்புவர்; இல்லாமல் அவர்களில் எவரையும் அரசியார் ஏற்றிட மறுத்திடில் அவர்களின் பெரும்பகைக் காளாக நேரிடும், அவமதிப் பதற்கே அவர்களை அழைத்ததாய் அவசியம் எண்ணுவர்; ஆத்திரம் கொள்ளுவர் எண்ணித் துணிவது எதற்கும் நல்லது" என்றான் கவிஞன்; எழுந்தான் தளபதி "வரும்பகை வென்று வாகை சூடவே பெரும்படை யுண்டு பீதியே வேண்டாம் அதற்கே என்னை அர்ப்பணித் துள்ளேன். இதற்கே கவலை எதற்கோ? என்னிடம் அந்தப் பொறுப்பை அளிப்பீர்" என்றான். "வந்திடும் பகையை வீழ்த்துதல் முறையே! வலியவே பகையை வளர்ப்பதும் குறையே! நீதியின் பக்கமே நிலைத்திடு வெற்றியைத் தீதினால் கவர்ந்திடச் சிறிதுமே இயலுமோ? வீரமும் தீரமும் வெற்றிகொள் உறுதியும் பூரண மாகவே பொருந்தினும் நீதியே எள்ளள வாயினும் இல்லா திருப்பின் உள்ளவை யாவுமே உதவாது போய்விடும் ஆதலால் அரசே, அத்தனை உண்மையும் ஓதியே அவர்களை உடன்வர வேண்டுவோம் என்றான் கவிஞன் ஏற்றார் அனைவரும். அன்றே அழைப்பை அனுப்பினார் அரசர். - - x - - |