பக்கம் எண் :

108


திடுக்கமே கொண்டு "அதிசயம் காணச்

     சீக்கிரம் வாருங்கள்" என்றான்.

நடுக்கமாய் மீண்டும் கூவினான் "காட்டின்

     நடுவினில் கிணற்றினில் புதையல்

எடுத்துளே னிங்கே எல்லோரும் வருவீர்"

     என்றவன் வியப்புடன் அழைக்கக்

கிடைத்திடாச் செல்வம் கிடைத்ததாய் எண்ணிக்

     கிட்டவே வந்தனர் வணிகர்.

 

பாத்திரம் தனிலோர் அழகனே இருக்கப்

     பார்த்ததும் மாலிக்கு வியந்து

"சாத்திரம் கூறும் அத்தனை அழகும்

     தாங்கிய இளைஞனே! கிணற்றில்

நேத்திர முடைய குருடரோ கொல்லும்

     நீசரோ தள்ளினர்; உன்றன்

கோத்திர மென்ன? குடியிருப் பெங்கே?

     கூறுக!" என்றனர் கனிவாய்.

 

மற்றொரு வணிகன் இளைஞனை நெருங்கி

     "மாசறு அழகனே, உன்னைப்

பெற்றவ ருண்டா? பிறந்தவ ருண்டா?

     பீதிகொள் ளாமலே சொல்வாய்.

கொற்றவர் குலமோ? குறையிலாச் செல்வர்

     குடும்பமோ பிறந்தனை?" என்றான்.

சுற்றிலும் பார்த்த இளைஞனோ இறையைத்

     துதித்துயிர் காத்ததைப் புகழ்ந்தான்.

 

"என்னுயிர் காத்த இறைவனின் கருணை

     என்னவென் றியம்புவே" னென்றான்.

"உன்னுயிர் காத்த தென்னுடைப் பணியாள்

     உணர்ந்திடு" என்றனன் மாலிக்.