உன்னையே தங்கள் அடிமை என்றார்கள் ஒன்றையும் மறுத்திடா திருந்தாய். பின்னைஏன் பொய்கள் பேசிடு கின்றாய். பேசடா உண்மையை!" என்றான். நெஞ்சினைப் பிளக்கும் சொற்கணை எறிந்து நின்றிடும் வணிகனைப் பார்த்து "நஞ்செனத் தெரிந்தும் சுவைப்பதை யொக்கும் நானவர் வார்த்தையை மறுத்தல் வஞ்சகம் அனைத்தும் வடிவமாய்க் கொண்டு வந்தவர் பொய்யை மெய்யாக்கக் கொஞ்சமும் அஞ்சார், மெய்யைப் பொய்யாக்கக் கூசிடார்" என்றனன் இளைஞன் "உண்மையைக் காட்டிப் பொய்ம்மையைப் போக்கல் உன்பொறுப் பல்லவோ!" என்றே அண்மையில் நெருங்கி வினவினார் மாலிக். "அவர்களோ பதின்மராய் இருக்க உண்மையென் றொன்றை யானுரைத் தாலே ஒப்பிடுவீர்களோ?" என்று வன்மையாய் இளைஞன் விடையிறுத் துலக வழக்கமும் சாடிட லானான். அனைத்தையும் கேட்ட மாலிக்கு வியந்தே அழகுபோ லறிவிலும் சிறந்து நினைத்ததைக் கூறும் துணிச்சலும் அடைந்து நெஞ்சகம் கவர்ந்திடும் இவனை எனக்கென நீங்கள் கொடுத்திடல் வேண்டும்; இவனுக்கு வழங்கிய விலையைக் கணக்கினில் எனக்கென் றெழுதுக பொதுவாய்க் கருதிடீர் தோழரே!" என்றான். |