பக்கம் எண் :

122


பின்னர் இங்கே இருப்போரில்

     பிடித்த ஒருவரைத் தேர்ந்திடுவாய்!

எண்ணம் போன்று அவருக்கே

     ஈவேனுன்னை" என்றாரே.

 

"இவரே ‘ஷாமி’ன் இளவரசர்

     இங்கே யிருப்போர் பெருவணிகர்.

அவரோ ‘ரூமி’ன் பேரரசர்,

     அங்கே அமர்ந்தோர் ஆணழகர்,

எவரோ ஒருவர் தேர்ந்திடுவாய்!"

     என்றார் தைமூஸ். இதைக்கேட்டே

"அவராய் இவரில் எவரேனும்

     ஆகார்" என்றாள் சுலைகாவே.

 

"நெஞ்சைக் கவர்ந்த அவர்நிழலை

     நெருங்கும் தகுதி படைத்தவரும்

தஞ்சம் தேடும் எனக்குதவி

     தந்திடு வீரரு மிங்கில்லை.

வஞ்சம் செய்தே எனை இங்கே

     வரவே செய்தீர், உயிர்போக்கும்

நஞ்சைத் தந்தால் நானுண்பேன்’

     நாடேன் மற்றவர்!" எனச்சொன்னாள்.

 

புத்தம் புதிய ஆடைகளைப்

     பொன்னா பரணம் முத்தணியைப்

பித்தம் பிடித்தோர் செயலேபோல்

     பிய்த்தே எறிந்த சுலைகாவே,

"கத்தன் படைப்பை மறந்தாலும்

     காதலன் காதலி மறப்பானோ?

நித்தம் கண்ணீர் வடித்தாலும்

     நினைவை மாற்றேன்" எனச்சொன்னாள்.