பக்கம் எண் :

123


வந்தோ ரெல்லாம் மனம் நொந்து

     மன்னர் தைமூஸ் முகம் பார்த்து

"அந்தோ யாங்கள் என்செய்வோம்.

     ஆசைத் தீயில் இளவரசி

வெந்தே, சொந்த நல்லுணர்வும்

     வேகச் செய்தார், இனியவரின்

சிந்தை விரும்பாச் செயலேதும்

     செய்தால் தீதே வரும்!" என்றார்

 

"கண்ணே போன்ற என்மகளின்

     காதற் கனவும் பலித்திடுமா?

என்னே செய்வேன், இதற்காக

     இந்நா டிழக்கவும் ஒப்பிடுவேன்!"

என்றார் தைமூஸ். அதைக்கேட்டே

     "எதற்கோ என்னைப் பெறவேண்டும்?"

என்றாள் சுலைகா, தைமூஸோ

     இழுத்துச் செல்லப் பணித்தாரே.

 

பற்றிச் செல்லும் தம்மகளைப்

     பார்த்து நெஞ்சம் புண்ணாகிச்

சுற்றிப் பார்த்து "சபையோரே,

     சுலைகா துன்பம் பார்த்தீரா?

சற்றும் இந்நோய் மாற்றிடுவோர்

     சபையில் உண்டா? அதற்காகக்

கொற்றம் வேண்டினும் தந்திடுவேன்

     கூறுக!" என்றார் தைமூஸே!

 

எதிரில் அமர்ந்த அவைப்புலவர்

     எழுந்து "அருமை இளவரசி

விதியின் கரத்தால் மனங்குழம்பி

     விட்டார், காதல் வசப்பட்டார்

மதியின் திறத்தால் இதைமாற்றும்

     மார்க்கம் சொல்வார் புவிஇல்லை

விதியின் கரத்தே விட்டிடுவோம்

     வேந்தே!" என்றார் துயர்பொங்க

- - x - -