பக்கம் எண் :

125


நாயாய்ப் பிறப்பினும் ஓயாமல் புவிசுற்றி

     நாதனைத் தேட லாகும்

     நாடாளும் மகளாகி வீடேயென் சிறையாகி

     நானுங்கள் கைதி யானேன்

பேயாய் இருப்பினும் பெண்ணுக் கிரங்குமெனப்

     பெரியோர்கள் சொல்வ துண்டே

     பெண்ணா யிருந்துமொரு பெண்ணுக் கிரங்காது

     பிழைசெய் தல்பெரும் பாவமே!

 

பெண்மாய மல்லாது பொல்லாத : தில்லையெனப்

     பிழைசொல்லி ஆண்மா யம்தான்

     பெருமாயை என்பதைத் திரையிட்டு மறைத்திட்ட

     பிசகினால் யான்சிக் கினேன்

பெண்பாவ மல்லாது பெரும்பாவ மில்லையெனப்

     பேசுவோ ரிங்கு இல்லையோ?

     பேதையான் மீளும்வழி யாதென்று கூறிடும்

     பெருந்தகை யாரு மிலையோ?

கண்மாயை வலைப்பட்டுக் கரைகாணும் வழியற்றுக்

     கதிதே டும்எனைக் காக்கவே

     காதலமு தூட்டிய நாதனார் வந்துதம்

     கரம்தந்து தூக்கு வாரோ?

பெண்மாயை என்றெனைப் பேயாய் மதிப்பரோ,

     பேதையான் என்செய் குவேன்?

     பேசாமடந் தையராய் வாய்மூடி நிற்பதேன்

     பேரன்புத் தோழி மாரே!

 

எல்லாம் விதிப்பயன் அல்லாது வேறில்லை

     என்றேங்கி நின்றழுவனோ?

     ஏவல்செய் தோழியரின் காவலுக் குள்ளாகும்

     இழிவுற் றதற்க ழுவனோ?

சொல்லாமல் விட்டோடும் கள்வனைத் துணைவனாய்த்

     தொடர்ந் திட்டதற் கழுவனோ?

     துயரேதுங் காணாத இளநெஞ்சை அழகுப்பேய்

     தொடவிட் டதற்க ழுவனோ?