கொல்லாமல் கொல்கின்ற ஆசையை அமுதமாய்க் குடித்திட்ட தற்கழு வேனோ? குன்றாத துன்பத்தைத் தருகின்ற பேரன்பு கொண்டதற் கேஅழு வனோ? எல்லோரும் ஏதுக்குக் கல்லாக நிற்கிறீர் என்னுயிர்த் தோழி மாரே! இவையன்றி வேறொன்று இருந்திடில் அதையேனும் எடுத்தோ திஎனைத் தேற்றுவீர்! தன்னையே வினவுதல் : எண்ணுவதைத் தந்திட இயலாரின் மகளான தெண்ணி எண்ணி அழுவனோ? எட்டாத பழத்திற்குக் கொட்டாவி விடும்கெட்ட இதயம் பெற்றதற் கழுவேனோ? உண்ணுவதற் கேற்றதோ அல்லவோ என்றுமுன் புணராத தற்க ழுவனோ? உதவாது போயினும் பெருந்தீது செய்பவரின் உறவேற்ற தற்க ழுவனோ? விண்ணுதிர் மாரியெனக் கண்ணுதிர் குருதியே வீணாவ தற்க ழுவனோ? வீராதி வீரனாய் வந்தகம் சோரம்செய் வித்த தற்கே அழுவனோ? பண்ணுவது தீதெனப் புரியாது கனவுக்குப் பலியா னதற்க ழுவனோ? பாங்கிமார் யாவரும் பகைவராய் மாறிய பாபத் திற்கே அழுவனோ? |