காதலனை வேண்டுதல் : பெண்ணாசை யற்றிடில் மண்ணாசை பொன்னாசை பெரும்வாழ்வி னாசை ஏது? பேரின்பப் பொழிலாகும் இல்லறந் துறந்திடில் பிறவியும் பெருமை பெறுமோ? பெண்ணா யிருப்பினும் ஆணா யிருப்பினும் பிறவி முழுமை யாகுமோ? பெண்ணொரு ஆணையும் ஆணொரு பெண்ணையும் பெற்றாலே பூர்த்தி யாகும். தன்னாசை கொன்றிடத் துணிபவர் உயிரற்ற சவமாவ துண்மை யலவோ? தவவாழ்க்கை ஏற்பினும் தம்மைத்தாம் ஏமாற்றல் தற்கொலைக் கொப் பாகுமே? என்னாசை தூண்டிவிட் டுன்னாசைக் கேங்கிட எங்கே மறைந்து விட்டாய்? ஏமாற்றி யதுபோதும் ஏந்தலே தயைகூர்ந்து என்னரு கில்வர வேண்டுமே! பாங்கியரின் அன்பிலே, தந்தையரின் பண்பிலே பார்க்காத பேரின் பத்தைப் பார்வையினில் காட்டிவிட் டோடிய அண்ணலே பரிவோ டணைக்க வருவீர்! ஏங்கிடும் விழிகளிற் றேங்கும்சுடு நீரையே இன்றே துடைக்க வருவீர்! எங்கே இருப்பினும் அங்கே எனைக்கூட்டி ஏகவே இனிது வருவீர்! |