பக்கம் எண் :

130


"இன்னுயிரே! என்மகளே! என்னவானாய் நீயே?

இதயம்போல இருவிழியும் இருண்டதுவோ கண்ணே!

என்னையும் அறிந்திலையோ?" என்றுமன்னர் கேட்க

"ஏதுக்குமை யானறிய வேண்டும்?" எனக்கேட்டாள்.

"விண்மணியே! நின்நிலையே விளங்கிடவே வந்தோம்

விருப்பமின்றேல் போய்விடுவோம்" என்றார் கவிவாணர்.

"பெண்மணியே இவ்வுலகின் கண்மணிதானென்ற

பெருமைபெறும் எம்நிலையை விளங்கினீரோ?" என்றாள்.

 

சிந்தையே கலங்கிநொந்த ஏந்தலர்தை மூஸே

செய்வதென்ன சொல்வதென்ன? என்றுஆய்ந்து நிற்கத்

தந்தையே தனதருகில் வந்தாரென் றுணர்ந்து

தாவிச்சென்று தாளில்வீழ்ந்து கேவிய சுலைகா

"எந்தையேயா னென்னசெய்வேன் என்னையே கவர்ந்த

எழிலரசை எவ்விதமே இவ்விடமே காண்பேன்?

தந்தையே எனக்கவரைக் தந்திட மாட் டீரோ?

தாங்கிடும் மனச்சுமையும் நீங்கிடுமோ?" என்றாள்.

 

"பொறுமையேநற் பெண்களுக்குப் பெருமையான செல்வம்

புத்திமாற்றும் புலனுணர்வை ஒடுக்குவதே வீரம்

சிறுமையேசெய் யாசைத்தீயை உறுதியால் அணைக்கும்

திடமனமே வெற்றிபெறும் என்றமைச்சர் கூறப்

பொறுமையே இழந்தெழுந்த பொற்கொடியாள் சுலைகா

புலியெனவே சீறிப்பாய்ந்து கிலிபிடிக்கச் செய்து

"வெறுமனேசெய் யுபதேசமே வேண்டாம்,நீங் களுங்கள்

வேலைகளைப் பார்த்திடுவீர்!" என்றதட்டி னாளே.