பூட்டியகை நடுங்கிடவே மாட்டியபொன்வி லங்கைப் பொருத்திவிட்டார் கட்டிலிலே! பொற்கொடி நகைத்தாள்! நீட்டியகை பற்றியே ‘நறுக்’ கெனக் கடித்தாள் நிலைகுலைந்து தலைகவிழ்ந்து செயலிழந்தார் மன்னர். "வாட்டியது போதுமெனைத் தீட்டியகூர் வாளால் வாஞ்சையின்றி வெட்டிஇரு துண்டமாகச் செய்வீர். பூட்டிவிட்ட பொன்விலங்கு காதலுக்கா? சொல்வீர்! போய்விடுவீர்!’! எனச்சுலைகா காறியுமிழ்ந் தாளே! "என்னசெய்த போதுமுனக் கின்னல்செய்ய ஒப்பேன். இங்குமங்கும் ஆடைகிழித் தோடுகின்ற தாலே பொன்னிற்செய்த இவ்விலங்கைக் கண்ணில்மாட்டுதற் போல் பொன்னுடலில் பூட்டும்படி நேர்ந்த" தெனச்சொன்னார். "இன்னுமென்ன செய்வதற்கு உண்டுமோ அனைத்தும் இப்பொழுதே செய்திடுவீர்" என்றாள்சுலை காவே. "புண்ணில்வேலைப் பாய்ச்சவேண்டாம், என்னிலையைச் சற்றுப் பொறுமையோடு ஆய்ந்திடுவாய் புதல்வியே" என்றாரே. "பொறுமைகொள்ளக் கூறுகின்ற அருமைத் தந்தையாரே, போதனையே செய்தெனக்கு வேதனை தராதீர்! வறுமைகொண்டு உடற்பசியால் வருந்திடுவோர் தம்மை வார்த்தையினால் தம்பசியைத் தீர்த்திடச் சொல்லாதீர். சிறுமைகொண்டு உழல்பவரைச் சினந்துதாக்கு வோராய்ச் சீர்குலைந்த என்னிடத்தில் போர்தொடுத்து வென்ற பெருமைகொள்ளும் பேரரசே, மறுபடியும் ஏதும் பேசவேண்டாம்! துன்பக்கணை வீசவேண்டா!" மென்றாள். |