நல்லதுயாம் செல்வோமிதோ: இளவரசி யாரே. நாடுமுற்றும் அவரையாங்கள் தேடிச்செல்லுகின்றோம். சொல்வதுயான் ஒன்றுளது, சொல்லட்டுமா?" என்று சுலைகாமுகம் பார்த்துநின்ற முதுகவியைப் பார்த்து "நல்லதையே சொல்வதெனில் சொல்லிவிட்டுச்செல்வீர் நானதற்குத் தடைவிதியேன்!" என்றாள் சுலைகாவே. சொல்லுகின்றேன் கேட்டிடுவீர்" எனக்கவிஞன் கூறத் "துரிதமாகக் கூறிடுவீர் அரும்புலவோய்" என்றாள். "எண்ணம் போன்று வாழ்ந்திடலாம்; நம்பிக்கையே கொண்டால் இன்மையெல்லாம் இருப்பதாகும்! இன்னலின்பமாகும்! திண்ணமாகச் சொல்லுகின்றேன் உங்களெண்ணம் வெல்லும்!. சிந்தைகுடி கொண்டஅவர் நேரில்வரு வாரே! உண்மையாக நீங்களிதை உறுதியாக நம்பி உள்ளத்திலே அமைதிகொள்வீர்!" என்றார்கவிவேந்தர். "புண்ணையாற்றும் அரும்புலவீர்! சொன்னதெல்லாம் உண்மை; பொறுமையாக இருந்திடுவேன் போய்வருவீர்" என்றாள். பிணிக்குஏற்ற மருந்தையொத்த பெருங்கவியின் வார்த்தை பேரரசர் தைமூஸ்கொண்ட பெருந்துயரம் போக்கக் கனிவுபொங்கக் கவிஞர்முகம் நோக்கிக்கண்க ளாலே கடமையாகும் நன்றியினை உடைமையா யணிந்து "இனிநமக்கே கவலைஇல்லை துணிவுடனே செல்வோம் எனதுமகள் தனதுஅகத் துயரினையே வென்றாள்; தனிமையிலே விட்டிடுவோம்" என்றரசர் கூறித் தாதியர்க்கும் பாதுகாக்கச் சைகைகாட்டிச் சென்றார். |