குறிப்புணர்ந்த இளவரசி மீண்டும் கொதிப்புற்றுக் "கொற்றவனே! சற்றுநில்லாய்" என்றுதடுத்தாளே. மறுப்பறிந்த மன்னவர் மலைத்து நின்றபோது மந்திரியார் "நிற்கவேண்டாம்; போய்விடுவோ" மென்றார். "வெறுப்பறிந்து சென்றிடலாம்!" என்றரசர் நிற்க, வீறுகொண்ட வேங்கையெனச் சீறி, "நாட்டையாளும் பொறுப்படைந்த மன்னவனே உன்னரசில் நீதி பொய்த்ததுவோ விலங்கெனக்கேன் பூட்டி விட்டாய்?" என்றாள். "கொள்ளையடித் திட்டவனைக் கொண்டுவந்து காலில் கொடுவிலங்கைப் பூட்டுதற்கு முடியவில்லை என்றால் கொள்ளைகொடுத் திட்டவளைக் குற்றவாளி போன்று கொடியகைதி யாக்குமுங்கள் நீதியென்ன நீதி? உள்ளமதைக் கொள்ளையிட்ட கள்வன் தப்பவிட்டு உளமிழந்து உருகுமென்னைப் பூட்டுவதோ நேர்மை? கள்ளமிலா நீதிசெயும் வள்ளலும் நீர்தானோ? கடமைதவ றாதஉயர் காவலனும் நீயோ?" நெஞ்சைத்துளைக் கின்றகொடு வேலெனவே சுலைகா நிகழ்த்துகின்ற வார்த்தையவர் இதயமீது பாய நஞ்சையுண்டு விட்டவராய் நடுநடுங்கித் தைமூஸ் "நன்மணியே என் மகளே! நின்மொழிதாங் கேனே, கெஞ்சுகின்ற தந்தையிடம் கிருபைகொண்டு நீயே கேட்கவேண்டாம் வேறுஏதும் உன்நிலையை மாற்றக் கொஞ்சகாலம் இப்படியே இருந்திடுவாய்" என்றார். "கொன்றெழிக்கும் வரையிருப்பேன்" என்றனளே சுலைகா. - - x - - |