குணமாக்கும் அருமருந்தும் கொண்டோடி மறைந்திட்ட கூற்றுவா, நின் கணநோக்கில் பலியான எனைநோக்க அஞ்சினையோ கழறு வாயே!" "ஓயாத கடலலையாய் முன்பின்னாய் உருண்டோ டும்உணர்ச்சி யூட்டித் தேயாத முழுமதியாய் இருந்தஎனை நின்நினை வாற்றேய வைத்து ஈயாத லோபியரும்: எண்ணாத கொடுந்துன்பம் எய்த வைத்துப் பேயாக்கி எனைவாட்டிப் பெருமைபெறும் நீயுமொரு பேய்தா னாமோ?" பற்றழித்த துறவியரும் பெண்பார்வை பட்டதெனில் பணிவா ரென்று கற்றறிந்த ஆய்ந்தோர்கள் கூறுவதை யானறிந்து களித்த துண்டு! முற்றிலுமே பெண்பார்வை நீவிரும்ப வில்லையெனில் மோகமூட்டும் நற்றவத்தின் பேரழகைப் பெற்றதுமேன் எனைவதைக்கும் நாட்டந் தானோ? பரிவற்ற நின்னுடைய அரிமாநோக் கென்னுடைய பண்பை யெல்லாம் அறிவற்ற தாக்குவித்த பெருங்கொடுமை ‘அம்மம்ம’ என்ன சொல்வேன்! முறிவற்ற மெய்நட்பு அழிவற்ற பெருவாழ்வின் மூல மன்றோ! குறியின்றி அம்பெய்து பயனின்றிக் கொன்றொழிடுத கொடுவே டாசொல்! |