பக்கம் எண் :

141


எள்ளவும் இன்பத்தை எண்ணாத

     தண்டனையா ஏற்க வேண்டும்?

கள்ளமெதும் அறியாத என்துயரம்

     களைந்திடவே கருணை செய்வாய்!

 

உன்னுடைய அழகெனக்கு இல்லையென்ப

     தொப்புகிறேன்; உலகு முற்றும்

என்னுடைய அழகுக்கு இணையான

     இன்னொருத்தி இருக்க மாட்டாள்!

கண்ணுடைய பேரழகா! நின்னுடைய

     ஆசையினால் கருகிப் போகும்

பெண்ணுடைய பெருந்துன்பம் பார்த்திரங்கிப்

     பிரியமுடன் பேசு வாயே!

 

செங்கடலின் மத்தியிலோ கருங்கடலின்

     முனையி னிலோ தீக் கொழுந்து

பொங்குகின்ற பாலையிலோ, பனிஉறையும்

     பாறையிலோ, புலியும் சிங்கம்

தங்குகின்ற காட்டினிலோ, எங்கேநீ

     ரிருக்கின்றீர்? சாற்று வீரேல்

அங்குடனே வந்திடுவேன், அதுநரகே

     என்றாலும் அன்போ டேற்பேன்!

 

எப்படியான் கெஞ்சிடினும் யாதொன்றும்

     கூறாமல் எட்டி நின்று

வெப்பமிகும் பார்வையினால் சுட்டெரிக்கும்

     அண்ணலரே! வேண்டு கின்றேன்,

இப்பொழுதே தங்கள்திருப் பெயருடனே

     இருப்பிடமும், இறைவ னாணை

செப்பிடுவீர்!" எனக்கூறித் துடித்தெழுந்து

     அவர்பாதம் சோர்ந்து வீழ்ந்தாள்!