அழகரின் பதில் : "விண்ணமுதம் சுரக்கின்ற நீலநதிப் பெருவளத்தால் விளங்கு கின்ற என்பதியை முத்தமிடச் செங்கடலின் பேரலைகள் இன்பம் கொள்ளும் உன்னதமே பெறும் மிசுரி’ல் இருக்கின்றேன். அப்பதியில் உயர்வு மிக்க மன்னவரின் முதலமைச்சர் யானாவேன்!" எனச்சொன் னார் மகிழ்ந் தெழுந்தாள்! விழித்தெழுந்த இளவரசி நாற்புறமும் நோக்கிஎதும் விளங்கா(து) நின்று விழித்தெழுந்து அருங்கனவை அழித்துவிட்ட தன்தவற்றை வெகுவாய் நொந்தாள்! பழித்துரைத்த காதலனார் ‘மிசுர்’பதியின் அமைச்சரெனப் பாங்கி யர்க்கு மொழிந்தவரை அடைந்திடவே தந்தையரை அழைத்திட்டாள் வேகமாக! தந்தையை வேண்டுதல் : பாங்கியரும் தந்தையரும் பாய்ந்துவர திருச்சுலைகா பார்த்து விட்டு "நீங்கியது என் துயரம் அவருடைய இருப்பிட மேநா னறிந்தேன்! ஏங்கியது போதுமினி, இங்கிருக்க இயலாது, அவரைப்பெற்று ஓங்கியொளிர் மிசுருக்குப் புறப்படவே முனைந்திடுவீர், உடனே" என்றாள். |