தம்முடைய திருமகளார் சாற்றுகின்ற வார்த்தையினைத் தைமூஸ் கேட்டு "செம்மையுடன் விளக்கிடுவாய் மிசுரிலவர் இருப்பிடத்தைத் தெளிவாய்ச் சொல்வாய்! இம்மையினில் அவரெங்கே இருந்தாலும் இங்கழைக்க என்னா லாகும்; நம்முடைய நாடுவிட்டு நாம்செல்லல் இழிவன்றோ, நவில்வாய்!" என்றார். "சீருயர்ந்த ‘மிசுரி’னிலே முதலமைச்சர் பதவியிலே சிறப்புப் பெற்றுப் பேருயர்ந்த அரசேஎன் நேரினிலே கனவினிலே பேசிச் சென்றார்!" பாருயர்ந்த பேரழகர் அவரன்றி வேறொருவர் பாரேன்; யாரும், கூறுமிதை மறுக்காமல் ஏற்றிடுவீர்!" எனச்சுலை காகூற லானாள். மகளுரைத்த மொழிகேட்டுத் திகிலடைந்த தைமூஸு மனமு டைந்து "புகழுடைய மிசுரினிலே முதலமைச்சர் பதவியிலே பொறுப்புத் தாங்கித் திகழுகின்ற அவர்வயதில் முதியவராம்! அல்லா மல்திரு மணத்தே மகிழுகின்ற எண்ணமவர்க் கிதுவரைக்கும் கிடையாதாம் மகளே" என்றார்! "இருமனமும் ஒப்பிவிடில் பெருவயது என் செய்யும்? எந்தை யேநீர் திருமணத்திற் கழைத்திடுவீர், மறுத்தாரேல் யானழிதல் திண்ண மென்பீர்! |