வருவோரெலாம் பொருளேதையும் வாங்காமலே நிற்க ஒருமாயமும் அறியாமலே உளம் நொந்திடும் மாலிக் அருகேயுள முதியோர்முகம் அன்பாகவே நோக்கிப் "பொருளேதுமே வேண்டாமெனில் போவீர்!" எனச் சொன்னான். ஆவல்மிகக் கொண்டே அவர், அங்கேபொருள் பரப்பி ஏவல்செயும் இளவல்முகம் இனிதாகவே பார்த்து பூவில்புகழ் மேவும்எழில் பொருந்தியுள இவன்நும் தேவியரின் செல்வமகன் தானோ?" எனக்கேட்டார். மற்றொருவர் மாலிக்கிடம் "மாசற்றிடும் அவரைப் பெற்றவரும் நீரோ, இலை பிறரோ?" எனக்கேட்க, "விற்றிடவா வந்தீ" ரென வேறொருவர் வினவ முற்றுலுமே வெறுத்தேமறு மொழி கூறினார் மாலிக் "வேண்டும்பொருள் கேட்டீரிவன் விற்கும்பொரு ளல்லன்; மீண்டும்எதும் கேட்காமலே வேறோரிடஞ் செல்வீர்,. |