தாங்கள் கிணற்றில் கண்டெடுத்த பேரழகரைக் காண்பதற்கே, மக்கள் கூட்டமாய் வந்து காணிக்கை கொடுத்துக் கண்டு செல்வதை அறிந்த மாலிக்கும், அவரது சகாக்களும், இவரை விற்பனை செய்வதனால் பெருந் தொகை விலையாகக் கிடைக்குமென்று நம்பினர். மனிதரை விலை கொடுத்து அடிமை கொள்வது அக்கால வழக்கம். இம்முறைப்படி இந்த அழகரை அதிக விலைக்கு விற்பதற்கேற்ற இடமாக எகிப்தின் சந்தையைத் தேர்ந்து அங்கு நோக்கிப் பிரயாணம் செய்தனர், மாலிக்கும் அவர் சகாக்களும். [இஃதிங்ஙனமிருக்க எகிப்து முதலமைச்சரைக் காணச் சுலைகாவின் தந்தை-மன்னர் தைமூஸ் அனுப்பிவைத்த தூதுவர்கள் திரும்பி வந்துவிட்டனர். தங்களின் கோரிக்கைக்கு அஜீஸ் கூறிய மறுமொழியை மன்னரிடம் கூறலாயினர்.] |