மங்கலச் சங்கு முழக்கியே இறையின் மலரடி வணங்கியே நின்று "எங்களின் அரசி இல்லற வாழ்வில் இன்பமே பொங்குக!" என்றார். புதுமணமும் புன்னகையும் : வீடலங் கரித்து வீதிகள் துலக்கி விதவிதத் தோரணம் அமைத்து நாடலங் கரித்து அரண்மனை அடைந்த நற்குடி மக்களின் முன்னே தேடருஞ் செல்வம் சுலைகாவை அழைத்துத் திருமணச் சடங்குகள் முடித்தார்! ஆடவர் பெண்டிர் அனைவரும் வாழ்த்த அரும்பினள் புன்னகை சுலைகா ! இன்பமும் துன்பமும் : தன்மகள் புரிந்த அழகுப்புன் னகையில் தன்னையே மறந்த தைமூஸு "என்மகள் சுலைகா மூன்றுஆண்டாக இழந்தநல் லின்பமே இன்று கண்டுளம் மகிழ்வே கொண்டது எனினும் கண்மணி பிரிந்திடும் துயரம் வென்றிட இயல வில்லையே!" என்று விம்மினார், விழிகளைத் துடைத்தார் ! தந்தையர் வருந்தத் தோழியர் வருந்தச் சபையினர் யாவரும் வருந்தச் சுந்தரச் சுலைகா பெருமகிழ் வுடனே துயர்ப்படும் தந்தையைப் பார்த்து |