பக்கம் எண் :

151


"சிந்தையி லின்பம் சுரந்திடச் செய்து

      தீமையாய் வருந்துதல் முறையோ ?

எந்தையே மீண்டும் துன்புறுத் தாதீர்!"

      என்றனள். அனைவரும் வியந்தார்.

புலவரின் போதனை :

அருங்கவி வாணர் அமைதியாய் எழுந்து

      அவையினர், அரசரை நோக்கிப்

"பெருமையாய்ப் பெற்று வளர்த்தவர் தமையும்

      பிறந்தவர், உறவினர் தமையும்,

அருமையாய்க் கூடிஇருந்தவர் தமையும்,

      ஆருயிர்த் தோழியர் தமையும்,

பெருமையாய்ப் பெற்ற கணவனுக் காகப்

      பிரிவதே பெண்மை!"யென் றுரைத்தார்.

 

"பிறந்திடும் கொடியி லிருந்திடும் மலர்கள்

      பெருமையே பெற்றிடா துதிரும்.

பிறந்திடும் மனையி லிருந்திடும் பெண்ணும்

      பிறவியின் பெருமையை இழப்பாள்,

பிறப்பிட மன்றிப் புகுமிடம் சிறப்புப்

      பெற்றிடும் மலர்களே பெண்கள்;

மறந்திடல் வேண்டாம்!" என்றனர் கவிஞர்  

      மன்னரும் மனத்தெளி வடைந்தார்!

 

"இற்றைய நாளாய் என்னுயிர்க் குயிராய்

      இருந்திடும் சுலைகாவை ‘மிசுரி’ன்

கொற்றவர் விரும்பும் அமைச்ச ரஜீஸின்

      குலவிளக் காக்கினம்!" என்று

சுற்றிலும் நோக்கிக் கூறிய தைமூஸ்

      சுலைகாவி னருகினிற் சென்று

"முற்றிலும் எனது பொறுப்பிருந் துன்னை

      விடுதலை செய்தனம்!" என்றார்.