பக்கம் எண் :

152


"விரும்புவ தெதையும் வேண்டிடில் தருவேன்

      விளம்புக!" என்றனர் தைமூஸ்!

"தருவதைத் தவிரப் பெறுவதற் கில்லை

      தந்தையே!" என்றனள் சுலைகா!

"அரும்பொரு ளொன்றை அளித்திட வேண்டும்

      ஆருயிர்ச் செல்வமே!" என்றார்.

"தருவதற் கியன்றால் தருகிறேன்!" என்றாள்.

      "தந்திடு பேரனை!" என்றார்.

 

மன்னரின் வார்த்தை சுலைகாவின் முகத்தை

      மாலையின் செந்நிற மாக்கப்

புன்னகை புரிந்து தலையினைக் கவிழ்த்துப்

      புதுப்பொலி வடைந்தனள் சுலைகா!

தன்னுடைய விருப்பை ஏற்றதற் கென்றே

      தவமகள் சிரம்வணங் கியதாய்

எண்ணிய தைமூஸ் இதயமே மகிழ்ந்து

      இன்னுயிர்ப் புதல்வியை அணைத்தார்.

 

இருந்தவ ரெல்லாம் வாழ்த்தொலி எழுப்ப

      இன்னுயிர்த் தோழியர் சூழப்

பெருந்தவம் பலித்த பெருமிதத் தோடு

      பெற்றவர் பாதமே பணிந்து,

"வருந்திடல் வேண்டாம்!" என்றனள் கண்ணீர்

      வடிந்தது அவளறி யாமல்.

பெருந்துயர் மறைத்து விழிகளைக் கசக்கிப்

      "பெருமையாய் வாழ்கநீ" என்றார்.