பக்கம் எண் :

154


அஜீஸின் வரவேற்பு

இயல்-33  

 

தன்னுடைய அமைச்சர், இல்லறத் துணைவி

      தகைமிகும் தைமூஸின் புதல்வி

மின்னிடைச் சுலைகா வருகையைக் குறித்து

      * மிசுரதி பதிரயான் மகிழ்ந்து

விண்ணிடை ஒளிரும் தாரகை எனவே

      விளக்குகள் அரண்மனை ஏற்றித்

தன்னுடை நாட்டின் பொதுவிடு முறையாய்ச்

      சாற்றினர், மக்களும் திரண்டார்!

 

நாட்டினுக் குழைக்கும் கடமையே பெரிதாய்

      நற்பணி யாற்றிடும் அமைச்சர்

வீட்டினுக் கேகும் வீதியின் மருங்கில்

      விருப்புடன் கூடிய மக்கள்,

பாட்டையின் முனையை நோக்கவே, தங்கப்

      பல்லக்குக் கண்டனர். வீரர்

ஈட்டியை ஏந்தித் தங்களின் தோளில்

      ஏற்றனர் பல்லக்கைப் பணிந்தே!

 

குதிரையில் வீரர் அணிவகுத் திடவே

      குறுநகை தவழ்ந்திட அமைச்சர்

எதிரினிற் சென்று சுலைகாவைக் காண

      ஏங்கினார்! தோழியர் அறிந்தார்.

மதிலெனப் பெண்கள் சிவிகையைச் சூழ்ந்து

      "வாழ்கவே! அமைச்சர்!" என்றொலிக்க,

எதிரொலி "சுலைகா வாழ்கவே" என்று

      எழுந்தது மக்களின் நடுவில்.

 

* மிசுரதிபதி ரயான்: எகிப்தின் அரசர் பெயர்,

  ரயான்-பின்-வலீத்.