பக்கம் எண் :

155


தன்னுயிர் நாதன் இன்முகம் நோக்கத்

      தவித்திடும் சுலைகா பல்லக்கின்

முன்திரை விரலால் விலக்கியே பார்க்க

      முதுகுதான் தெரிந்தது; அதிர்ந்தாள்!

பின்திரை விலக்கிச் சேடிய ரழைத்துப்

      பெருந்திகி லடைந்தவ ளாக,

"என்னுயிர்க் காதல் ஏற்றவர் இவரா?"

      என்றனள். தோழியர் விழித்தார்!

 

குண்டுகள் முழங்கக் கருவிகள் இசைத்துக்

      குழுமியோர் நறுமலர் தெளிக்கக்

கண்டவர் வியக்கும் வண்ணமாய் மகளிர்

      களிநடம் புரிந்திடச் செல்வர்,

மண்டலம் வியக்கும் அரும்பொருள் பரிசாய்

      வழங்கிடச் சுமந்துவந் திடவே

அண்டரும் வியக்க அமைச்சரின் இல்லம்

      அடைந்தது மணமகள் பவனி!

 

மாசறும் சுலைகா மலரடி தனது

      மாளிகை மிதிப்பதை அமைச்சர்

பேசரும் பேறாய்க் கருதியே மகிழ்ந்து

      பெருமையாய்ப் பல்லக்கைஇல்ல

வாசலில் நிறுத்தித் திரையினை விலக்கி

      "வருகவே!" என்றதும் சுலைகா

ஆசையாய் நோக்கி அருவருப் புடனே

      ‘ஆ’ என அலறியே சாய்ந்தாள்.

 

பாங்கியர் விரைந்து மணமகள் முகத்தில்

      பன்னீரைத் தெளித்திட, அமைச்சர்

ஏங்கிட, அருகில் இருந்தவர் களைப்’பென

      இயம்பிட, இவர்களி லொருவர்,