சாய்ந்தேவிழுந் தாளாயினும் சற்றேகிடந் தாளா? பாய்ந்தேஎழுந் தாளே, மனம் பதறிஅழு தாளே! "ஓய்ந்தேகிடந் தேனே, இங்கே ஓடிவரச் செய்தே மாய்ந்தேமறைந் தானோ, எனை மறந்தேபிரிந் தானோ?" "மானம்இழந் தோனாயினும் மனையாளினைப் பிறர்க்கே தானம்புரி வானோ, பெருந் தர்மம்இது தானோ? ஈனம்அடைந் தேனே, அவ மானம்எனக் காமோ? நாணம்இழந் தானோ, கொடை ஞானம்பயி லானோ?" "எங்கேயடி என்நாயகன் எங்கேயடி தோழீ! இங்கேஇலை அங்கேஇலை அவனெங்கிலும் இலையோ? இங்கேஅவன் அமைச்சன்என இயம்பியதும் பொய்யோ? எங்கேயடி. சொல்லுங்கடி?" என்றாள்சுலை காவே! ஏங்கியழும் சுலைகாவினுக் கேதும்உரைக் காமல் பாங்கியரும் மனமேங்கிடப் பார்த்தார்முத லமைச்சர், |