வீங்கியது நெஞ்சம், அவர் விரைந்தாரவள் மஞ்சம் "தூங்கிஎழத் துயர்நீங்கிடும், சுலைகா!" எனச் சொன்னார். நீங்காத்துயில் கொள்ளும்வழி நீரேஅறி வீரோ? தூங்காமனம் தூங்கும்முறை சொல்லப்பயின் றீரோ? தீங்காயெனை இங்கேவரச் செய்தே, பெருஞ் சதியால் தாங்காத்துயர் தந்தீர், இது தகுமோ?" எனக் கேட்டாள். "துயரால்மனம் துடித்தேபழி சொல்லும்சுலை காவே! அயலார்துயர் சகியாஎனை அறியாதுரைக் கின்றாய். தயவாய்உனை மணம்செய்திடத் தைமூஸ் அழைத் ததனால் மயலாகிய உனைப்பெற்றிட மனமொப்பினன்" என்றார். "மனமேமிக நேசித்திடும் மணவாளரின் வடிவில் எனையேமயக் கிடப்பேயினை ஏவியது முறையோ? உனையேமணந் திடவேபெயர் உரைத்ததுவும் சரியோ? எனையேநெருங் காதீர்!" என இசைத்தாள் சுலைகாவே! |