பக்கம் எண் :

164


பெண் மனம் சுட்டெரிக்கும்

      பெருந்தழற் பிம்ப மான

கன்மனத் திங்க ளேநீ!

      கடிதினில் மறைந்து போவாய்!"

 

துயர்படும் சுலைகா வீசும்

      சுடுமொழி தாங்காத் திங்கள்

பயத்துடன் கங்கு லுள்ளே

      பதுங்கிடக் கண்டு, வெற்றி

நயத்துடன் சோலை நோக்கி

      நடந்தனள், அங்கே புட்கள்

வியப்புடன் கீச்சிட் டேதோ

      விளம்பிடக் கேட்க லானாள்.

 

புட்களுடன் பேசுதல் :

"உரிமையாய்ப் பெடையைக் கூடி

      உள்ளமே மகிழும் புட்காள்!

அருமையாய் வரித்த நாதன்

      அடைந்திடா துருகும் என்னைச்

சிறுமையாய் மதித்து எண்ணிச்

      சிரிப்பது கொடுமை யன்றோ?

பெருமையாய்க் குலவும் நீங்கள்

      பிரிவினால் துடித்த துண்டோ?"

 

"விண்ணிடைப் பறக்கும் போதும்,

      விரிகிளை தாவும் போதும்

குன்றிடை அமரும் போதும்

      குளித்துடல் உலர்த்தும் போதும்

உண்கையில், உறங்கும் போதும்

      உடலுயிர் போன்று உள்ளம்

ஒன்றிடும் புட்காள்! என்றன்

      ஊழ்வினைக் கிரங்கி டீரோ?"