"கண்ணிடைத் தோன்றா வண்ணம் கருத்தினில் நுழையும் காற்றே! என்னுயிர்க் காதல் வேந்தன் எழிற்கரம் நீயோ, சொல்வாய்!" "எங்கவ ருள்ளா ரென்றே இயம்புவாய்; இல்லை என்றால் அங்கெனை அழைத்துச் செல்ல அன்புடன் இசைவாய்! மேலும் இங்கெனை இருக்க வைத்தால் என்னுயிர் இருக்கா தென்றே அங்கவ ரறியச் செய்வாய் அரணையும் கடக்கும் காற்றே!" "புவனமே எங்கும் சென்று புகழ்பெறும் காற்றே! என்றன் கவனமே கவர்ந்து காதல் கனவிலே மயங்கிவிட்ட அவரையே இது வரைக்கும் அகிலமே காண்கி லையோ? இவரையே முன்னர் கண்டு இன்றுநீ மறந்த னையோ?" "சிலர்முக மேனும் என்றன் செம்மலின் வதனம் போன்று உலகிடைக் கண்டதுண்டோ? ஒளிமுகம் ஒன்று தானே! பலர்முகம் பார்த்த தாலென் பதிமுகம் மறக்கப் போமோ? மலர்முகம் தழுவிச் சென்று மணம்பெறும் காற்றே சொல்வாய்!" |