பக்கம் எண் :

167


"எங்கிலும் அவரை நீயே

      இதுவரை காணா விட்டால்

இங்கிருந் துடனே சென்று

      ஏந்தலைத் தேடி, நெஞ்சில்

பொங்கிடும் துயரைச் சொல்லிப்

      புலருமுன் வரவே செய்வாய்!

இங்கவர் வர மறுத்தால்

      இருப்பிடம் எனக்குச் சொல்வாய்!"

 

"காட்டையும் கடலை யும்நீ

      கடந்திடும் ஆற்றல் பெற்றாய்;

பூட்டிய சிறையி னுள்ளும்

      புகுந்திடும் திறமை பெற்றாய்

வாட்டிடும் அன்பு வேட்கை

      வளர்த்திடும் காற்றே! காதல்

ஊட்டிய அவரை மீண்டும்

      ஒருமுறை காணச் செய்வாய்!"

 

"விண்ணிடைப் பறந்து பாராய்

      விரிகடல் மூழ்கிப் பாராய்,

மண்ணிடை எங்கும் பாராய்

      மன்னவன் தன்னைத் தேடி

என்மனத் துன்பம் கூறி

      இங்கவர் வரவே செய்வாய்!

உன்துணை யின்றி மற்றோர்

      உரைப்பதை உணர்வார் யாரே?"

 

இறைஞ்சிடும் சுலைகா ஆணை

      ஏற்றது போன்று காற்று

பறந்தது நான்கு திக்கும்

      பரிதியும் உதிக்க லானான்.

பிறந்தன நாட்கள், வாரம்

      புகுந்தது திங்கள் தோன்ற

விரைந்தது காலம், துன்பம்

      வளர்ந்தது சுலைகா நெஞ்சில்.