பக்கம் எண் :

169


தலைகுனிந்து நிற்கின்ற அடிமையரை

      விலைபேசும் தரக ரின்பால்

விலையறிந்து அடிமையரின் தரமறிந்து

      பேரஞ்செய் வித்தார் செல்வர்.

நிலையறிந்து மாலிக்கு தம்மடிமை

      விற்றிடவே நினைவு கொண்டு

"கலையறிந்த அழகனைத்தும் பெற்றவனை

      எல்லோரும் காண்பீ" ரென்றான்.

 

வந்தவரில் பெரும்பாலோர் வியப்புற்று

      மாலிக்கின் வார்த்தை கேட்டுச்

"சுந்தரனைக் காட்டிடுவீர் விலையென்ன

      வென்பதையும் சொல்வீர்!" என்றார்.

"சந்திரனுக் குரியவிலை சாற்றுதற்கு

      இயன்றிடுமோ? தகைமிக் கோரே!

எந்தவிலை மதிக்கின்றீ ரென்பதைநீர்

      இயம்பிடுவீர்!" என்றான் மாலிக்.

 

"சந்திரனைக் காணாமல் விலைவைக்க

      இயன்றிடுமோ? சற்றே கண்டால்

சுந்தரனுக்கேற்றவிலை கூறிடுவோம்!"

      என்றொருவர் சொல்ல, மற்றோர்

"தந்திரமாய் விற்பதற்கு முயல்கின்றான்!"

      எனக்குற்றம் சாட்ட, மாலிக்,

"மந்திரமாய் நினைக்காதீர், மயங்காதீர்

      மாயமென மலைத்தி டாதீர்!"

 

"எம்மடிமை இவனழகைக் காண்பதற்கும்

      காணிக்கை ஈந்தோர் பல்லோர்!

தம்மடிமை யாக்குதற்கு எண்ணற்ற

      செல்வர்கள் தயவாய்க் கேட்டார்!