பக்கம் எண் :

170


எம்மடிமைக் கேற்றவிலை தருபவர்கள்

      மிசுரிலிருக் கின்றார் என்றோம். 

உம்மடிமை யாக்கிடுவோம் உயர்ந்தவிலை

      கேட்டிடுவீர் உடனே" என்றான்.

 

"பொருளுக்குத் தக்கவிலை தருகின்றோம்!"

      என்றொருவர் பொதுவாய்ச் சொல்ல,

"இருக்கின்ற பொன்னெல்லாம் எழில்மிக்கோன்

      என்றக்கால் ஈவேன்!" என்று  

‘நறுக்’கென்று அருகிருந்த சீமாட்டி

      நவின்றிட்டாள். நன்றி கூறி 

‘விறுக்’கென்று திரையினையே மாலிக்கு  

      விலக்கிடவே வியந்து நின்றார்!

 

"வாருங்கள்! அருகினிலே வந்தழகன்

      திருமுகத்தின் வனப்பு முற்றும்  

பாருங்கள். பார்த்தவர்கள் நகருங்கள்;  

      மற்றவரும் பார்க்க வேண்டும்!

கூறுங்கள் தக்கவிலை! விலைமிக்கப்

      பொருளேனும் கொண்டு வந்து

தாருங்கள்!" எனமாலிக் சாற்றிடவே

      மனமுடைந்தார் செல்வ மற்றோர்!

 

கண்டவரில் பெருஞ்செல்வர் மெய்சிலிர்க்க  

      வாயடைத்துக் கண்கள் பூத்து

நின்றனரே யல்லாமல் சொன்னபடி  

      விலைகேளா நிலையி லானார்!

"நன்றலவே பேச்சிழந்து நிற்பதுவே"

      எனமாலிக் நடுவில் கேட்க

நின்றிருந்தோர் நினைவடைந்து இளைஞரது

      அருகினிலே நெருங்கி வந்தார்!