ஆய்ந்துணர்ந்த நல்லமைச்சர் இளவல்திரு முகம்நோக்கி, ‘அழகு யாவும் தோய்ந்தொளிரும் இவனை’யுடன் தனதில்லம் கொண்டுவரச் சொல்ல லானார் பெரியவிலை கிடைக்குமெனும் பேராசை மாலிக்கின் பிடரி பற்றித் துரிதமுடன் தள்ளிடவே அமைச்சருடன் மற்றவரும் தொடர்ந்து செல்ல அரியவிலை தருவதற்கு ஒப்பியவர் வருத்தமுற அமைச்ச ரில்லப் பெரியமதில் கடந்திடவே சுலைகாவின் தாதியர்கள் பிரமிப் புற்றார்! சுலைகா காணுதல் ‘எழில்நிறையும் பேரழகன் அடிமைப்பட வந்துள்ளான்!’ என்ற செய்தி வழிமுழுதும் மொழிந்தபடித் தாதியர்கள் சுலைகாமுன் வந்துநிற்க விழிபொழியும் கண்ணீரைத் துடைத்தபடி உடனெழுந்து விரைந்து சென்று எழிலரசி சுலைகாதன் கடைவிழியால் இளவல்முகம் இனிது கண்டாள்! கண்டவுடன் மனம்துடிக்கக் கனவுமுகம் புன்னகைக்கக் கதறி வீழ்ந்து தண்டமிடக் கைதுடிக்கத் துயருரைக்க நாதுடிக்கத் தன்னைச் சூழ்ந்து நின்றவரை நோட்டமிட்டு விழிதுடிக்கும் சுலைகாவை நிமிர்ந்து நோக்கி, "நன்றிவரை வாங்கிடுவோம்!" என்றமைச்சர் நவின்றபடி விலையைக் கேட்டார்! |