துன்பமும் இன்பமும் இயல்-37 உண்ணுதற்கு உணவேதும் கிட்டாப் போதில் உடல்வருத்தும் பசிநோயைத் தாங்கி நிற்போர் கண்ணெதிரில் புல்லுணவே வந்த போதும் கடும்பசியைக் களைந்திடவே துடித்தல் போன்று, தன்னருமைக் காதலரைக் காணு மட்டும் தலைதூக்கும் உள்ளுணர்வைச் சகித்துக் காத்த பெண்ணரசி சுலைகாதன் பசியைப் போக்கப் பின்னிரவில் யூசுபையே நெருங்க லானாள்! கண்ணுறங்கும் யூசுபுதன் எழில்மு கத்தில் கலையுறங்கக் கவினுறங்கச் சுலைகா கண்டு "மண்ணுறங்கும் விண்ணுறங்கும் போதில் என்றன் மனமுறங்கச் செய்யாது விழிக்க வைத்துக் கண்ணுறங்கும் என்னரசே!’ என்ற ழைக்கக் கருத்தெழுந்தும் நாவழுந்தக் கலங்கி மற்றப் பெண்ணுறங்கும் கூடத்தை எட்டிப் பார்த்துப் பேரழகர் காலடியில் பெருமூச் சிட்டாள்! தனமளித்துத் தன்னடிமை யாக்கு வித்தும் தனக்குதவி புரியாது துயிலில் மூழ்கும் கனவளித்த காதலரை எழுப்பி விட்டுக் காத்திருந்த தன்நெஞ்சைத் திறந்துகாட்டி உணவளித்து உயிர்காக்கப் பிச்சை கோரும் உணர்வெழுந்தும் செயலிழந்து கைநடுங்க மனந்துடித்து எழிலரசி சுலைகா நிற்க மறைவிருந்து ஒருதோழி அனைத்தும் கண்டாள்! |