பக்கம் எண் :

176


எலிபிடிக்கப் பதுங்குகின்ற பூனை போன்று

      இருளிடுக்கில் பதுங்கிநின்ற தோழி நெஞ்சில்

கிலிபிடிக்க, இளவரசி கரம்பி டித்துக்

      கீர்த்திமிகும் பெண்ணுடைமை யாகும்கற்பைப்

பலிகொடுக்கத் துணிந்தசெயல் தடுத்து நிற்க,

      பயமடைந்த சுலைகாவின் இளமை நெஞ்சில்

வலியெடுக்கத் தோழியவள் தோளில் சாய்ந்தாள்;

      வாஞ்சையுடன் விலாவணைத்துமஞ்சம் சேர்த்தாள்.

 

"அடிமையவன் அழகினிலே மனமே வைத்து

      அரசகுலப் பெருமைக்கே அழிவு தேடல்

மடமையிலும் மடமை" யெனத் தோழிகூற

      மனம்கொதித்துச் சுலைகாதன் விழிசி வக்க

"அடிமையெனக் கருதினையோ கனவில் தோன்றி

      அடிமைகொண்ட என்னரசர் இவரே யாவார்;

உடைமையினுக் குரியவரை அடிமை யென்றால்

      உன்நாவை நறுக்கிடுவேன், போடீ!" என்றாள்.

 

என்றைக்கு மில்லாத கொடுஞ்சொல் கொண்டு

      இளவரசி தனைத்தாக்கி விட்டபோதும்

அன்றைக்கு அவள் கனவில் தோன்றி நெஞ்சை

      அபகரித்தோர் இவரென்ற செய்தி கேட்டு,

"இன்றைக்கு இதனாலென் இதயம் காணும்

      இன்பத்தை இதற்குமுன் எதிலும் காணேன்!"

என்றஉயிர்த் தோழியினைச் சுலைகா நோக்கி

      "இங்கவரை உடனெழுப்பி வருவாய்!" என்றாள்.

 

கண்ணியிலே சிக்கிவிட்ட பறவை, வேடன்

      கையிருந்து தப்பிடுமோ? இங்கு நம்மை

அன்றியவர் எங்கேனும் செல்லப் போமோ,

      அவசரமேன் இளவரசி?" என்றாள் தோழி.