பக்கம் எண் :

177


"உண்மையிலே தாமதித்தால் பறந்து போகும்;

      உருக்காமல் வெண்ணெய்நறு நெய்யா காதே

அண்மையிலே அவரைவரச் செய்வாய்!" என்றாள்

      "அப்படியே ஆகட்டும்!" என்றாள் தோழி!

 

அவிழ்ந்தகுழல் மலரடியில் தவழவிட்டு

      அழகுதரும் நல்லணிகள் பலவும் பூண்டு

குவிந்தமலர் சிரிப்பதுபோல் முகம்ம லர்ந்து

      கொள்ளைகொண்ட காதலரைக் காண நின்றாள்.

கவிழ்ந்ததலை நிமிராமல் தன்முன் வந்த

      கட்டழகர் யூசுபையே கனிவாய் நோக்கச்

சிவந்ததவள் கன்னங்கள், சிலிர்த்த துள்ளம்

      சிலையானாள் முகம்வியர்க்கப் பேச்சி ழந்தாள்.

 

"எதற்கென்னை அழைத்தீர்கள்?" என்றார் யூசுப்.

      "இங்கழைக்கக் கூடாதா?" என்று கேட்டாள்.

"அதற்கல்ல; வேலை எதும் உண்டோ?" என்றார்.

      "அல்லாமல் வீணுக்கா அழைப்பேன்?" என்றாள்.

"எதற்கென்னை அழைத்தீரோ, சொல்வீர்!" என்றார்.

      "இன்றைக்குத் தூக்கம் வரவில்லை!" என்றாள்.

"இதற்கென்ன யான் செய்யக்கூடும்?" என்றார்.

      "ஏதேனும் கதைசொல்வீர்!" என்று சொன்னாள்.

 

"கதைசொல்லக் கற்றதில்லை!" என்றார் யூசுப்.

      "கனவிலெதும்காண்கிலையோ?" என்று கேட்டாள்.

"அதைச் சொல்லக் கூடாதென் றெனது தந்தை

      அப்பொழுதே கூறியுள்ளார்" என்றார் யூசப்.

"எதைச் சொல்ல மறுத்தீரோ அதை என்னாலே

      இயம்புதற்கு ஆகு" மெனச் சுலைகா சொன்னாள்.

இதைச்சற்றும் எதிர்பாரா யூசுப்,   மெல்ல    

      ஏறிட்டுச் சுலைகாவை நோக்க லானார்!