"நள்ளிரவில் பெண்ணொருத்தி இல்லம் சென்று நல்லழகைக் காட்டியவள் உள்ளம் தொட்டுக் கொள்ளையிட்டுக் கள்வனைப் போல் மறைந்த உங்கள் கொடுங்கனவை யானறிவேன்!" எனச்சு லைகா கள்ளமின்றிக் கூறிடவே "பொய், பொய்" என்று கபடமற்ற யூசுபுடன் மறுத்துக்கூற "எள்ளளவும் சந்தேக மில்லை; அன்று என்கனவில் தோன்றியவர் நீர்தான்" என்றாள். "விலைகொடுத்து வாங்கிவிட்ட அடிமை மீது வீண்குற்றம் சுமத்துவது பாவ மாகும்; தலைஇழப்ப தென்றாலும் தவறு செய்யச் சற்றேனும் சம்மதியேன்!" என்றார் யூசப். மலைசரிந்து தன்நெஞ்சில் வீழ்ந்த தேபோல் மனங்குலைந்த எழிலரசி மயக்க முற்று நிலைதவறி அரைநொடியில் சாய்ந்துவீழ நின்றருந்த யூசுபுஅ திர்ந்து போனார்! சாய்ந்தவளைக் கைகொடுத்துத் தாங்கு தற்கும் சற்றேனும் முனையாது நின்ற யூசப் பாய்ந்தகன்று பாங்கியரை அழைக்க லானார் பதுங்கிநின்ற உயிர்த்தோழி ஏவல் கேட்கச் சாய்ந்துவிட்ட சுலைகாவின் நிலையைக் கூறிச் சட்டென்று அப்பாலே நடந்தார் யூசப் காய்ந்தெழுந்த வார்த்தைகளை அடக்கித் தோழி கடிதினிலே சுலைகாவின் பக்கம் வந்தாள். பன்னீரைச் சுலைகாவின் முகம்தெ ளித்துப் படுக்கையினில் ஒழுங்குடனே கிடத்தி விட்டுத் தண்ணீரை வற்புறுத்தி அருந்தச் செய்து தலைகவிழ்ந்து மனம்பதறித் தோழி நிற்க |