கண்ணீரில் மிதந்திடவே விழிபி துக்கிக் காதலனைக் காணாமல் துடித்தெ ழுந்து "என்னாசை நாயகனார் எங்கே?" என்று எதிர்நின்ற தோழியினைச் சுலைகா கேட்டாள். "அதிவிரைவில் வந்திடுவார்!" என்றாள் தோழி. "அழைத்துடனேவா!" வென்று சுலைகா சொன்னாள். "இதுசமயம் துயில்புரியக் கூடும்!" என்றாள். இதைக்கேட்ட இளவரசி அமைதி பெற்று "மதியழகர் தூக்கத்தைக் கலைக்க வேண்டாம். மற்றவர்கள் அறியாமல் நாமே சென்று பதிமுகத்தை ஒருமுறையான் காண வேண்டும். பக்கத்தில் என்துணைக்கு வருவாய்", என்றாள். "அங்கேநாம் செல்லுவதை அடுத்தோர் கண்டால் அதுமிக்க இழிவாகும், நாளை தோறும் இங்கேயே அவர் தூங்கச் செய்வோ" மென்று இயம்புகின்ற தோழியினைச் சுலைகா நோக்கி, "அங்கேநாம் செல்லுவதால் தீங்கே இல்லை அடுத்தவர்கள் கண்டாலும் அச்சமில்லை. எங்கேனும் ஏவலர்க்கு அஞ்சு கின்ற இளவரசி உண்டாமோ?" என்று சொன்னாள்! விரைந்தெழுந்து சுலைகாவின் கரங்கள் பற்றி "விரும்பாத அவரிடம்நாம் செல்ல வேண்டாம், மறைந்திருந்து யாரேனும் கண்டா ரானால் மானம்போம், அதனோடு வாழ்வும் போகும்! சிறந்தகுண யூசுபுவும் வெறுக்கக் கூடும். சில நாட்கள் பொறுத்திருப்பீர்!" என்றாள் தோழி. "இறந்தொழியும் வரையினிலும் அவருக் காக எத்துயரும் தாங்கு"வதாய்ச் சுலைகா சொன்னாள். - - x - - |