(தோழி சில நாட்கள் பொறுத்திருக்கக் கூறினாள். சுலைகா பல நாட்கள் காத்திருந்தும் தன் எண்ணம் பலிக்காதது கண்டு தானே முயலுவதற்குத தீர்மானித்தாள்.) பழி சுமத்தல் இயல்-38 நித்தியம் கண்ணீர் வடித்தகம் துடித்து நிலைகுலைந் துருகிடும் தன்பால் உத்தமத் தோழி வருவதைப் பார்த்து ‘ஓ’வெனக் கதறிய சுலைகா ‘எத்தனை நாட்கள், எத்தனை வாரம் இப்படிக் கலங்குவ’ தென்றாள். "அத்தனை துயரும் இன்பமாய் மாறும் அரசியே!" என்றனள் தோழி. "ஜோசியம் போதும், தோழியே அவரென் துன்பமே துடைத்திட ஏதும் பேசிய துண்டோ? பெருந்தகை அவரைப் பிரியமாய் இணங்கவைத் தாயோ? ஆசையின் கடலில் அமிழ்ந்திடு வேனோ? அன்பெனும் கரையடை வேனோ? பாசமும் பொய்யோ, கூறடி!" என்று பதறியே கேட்டனள் சுலைகா. |