பக்கம் எண் :

181


பதறிடும் சுலைகா துயர்முகம் நோக்கிப்

      பாங்கியின் நெஞ்சமே துடிக்க

"உதறிடும் அவரை உவந்திடச் செய்ய

      ஒவ்வொரு வழியதாய் முயன்றும்

சிதறிய தல்லால் பலித்திட வில்லை;

      திரும்பவும் முயல்கிறேன்" என்றாள்.

கதறிய சுலைகா "போதுமுன் முயற்சி

      கடிதினில் அழைத்துவா" என்றாள்.  

முயன்றால் முடியாதா?

 

"இயன்றவை அனைத்தும் இன்னமும் செய்து

      ஏற்றிட முனைகிறேன், முடிவில்

முயன்றவை யாவும் முறிந்திடில் நீங்கள்

      முயலலாம்!" என்றனள் தோழி.

"பயன் தரும் வழியில் முயன்றிட வேண்டும்,

      பாங்கியே!" என்றனள் சுலைகா.

"முயன்றிடும் வழியை விளக்கிடில் செய்வேன்"

      மொழிந்திட வேண்டினாள் தோழி.  

புதிய முயற்சி :

 

"பொழிலிடை யூசுப் இருந்திடும் போதில்

      பொலிவுடை அணிந்திடச் செய்து

எழிலுறும் சேடியர் பலரையே அனுப்பி

      இளமையின் உணர்ச்சியை எழுப்ப

விழிகவர் ஆடல், செவிநுகர் பாடல்

      விருந்தினால் அவர்மனம் தூண்டி

அழைத்துடன் வந்தால் எண்ணமே வெற்றி

      ஆகலாம்!" என்றனள் சுலைகா.