விரித்த வலையிலும் விழவில்லை: "இவ்வழி முறையால் யூசுபை மயக்க எண்ணியான் முன்னரே செய்தேன். அவ்வழி தனிலும் அகப்பட வில்லை. அழகுறும் தோழிகள் சிலரை எவ்வழி செய்தும் யூசுபின் நெஞ்சில் இளமையைத் தூண்டிடச் சொன்னேன். இவ்வழி தனிலும் இணங்கினா ரில்லை!" என்றனள் துயருடன் தோழி! "இன்னமும் வேறு செய்வதற் கென்ன இருக்கிற" தென்றனள் சுலைகா! "உண்மையில் சொன்னால் ஒன்றுமே இல்லை. உறுதியாய் இருக்கிறார்" என்றாள். "பெண்மையின் துன்பம் உணர்ந்திடா ஆணைப் பெருமைக்கா படைத்தனன் இறைவன் ?" என்றனள் சுலைகா. என்னவோ கூற எண்ணிய தோழிவா யடைத்தாள்! "சொல்லிட நினைத்ததைச் சொல்லுவாய்" என்று தோழியைத் தூண்டினள் சுலைகா. "சொல்லிடில் அதுபெருந் துன்பமா கிடலாம் துயரமே அடைந்தது போதும். நல்லது என்றால் மறைத்திடேன்" என்று நாத்தடு மாறிடச் சொன்னாள். "கொல்லுவ தாயினும் கூறுவாய்!" என்று கோரினாள் துடிப்புடன் சுலைகா. |