பக்கம் எண் :

183


தோழியின் ஐயம் :    

"அழகினில் மிகுந்த யூசுபை ஆய்ந்தால்

     ஆண்மையில் லாதவர் என்றே

பழகிடப் பணித்த பாங்கியர் உரைத்தார்  

     பார்த்திடில் எனக்குமவ் வையம்

எழுகிற தரசி!": என்றனள் தோழி.      

     இவ்வுரை கேட்டதும் கண்ணீர்

ஒழுகிட சுலைகா, "உண்மையே யானால்

     ஒப்புவே னிதையும்யான்": என்றாள்.

 

பிணத்தைத் தழுவுவதா?

"மணமெதும் இல்லா மலரணி வதனால்

       மனமது மகிழுவ தில்லை,

குணமெதும் இல்லாக் கணவனைப் பெற்றால்

     குடிநலம் பெறுவது மில்லை.

கனவென அழியும் அழகினுக் காகக்  

     காதல் செய்கின்றவர், அறிந்தும்

பிணந்தழு விடவே முயல்பவ ராவர்;

     பிழையிது!" என்றனள் தோழி.

 

இதுதான் காதல்

"ஒளிமிகும் விளக்கின் தீச்சுடர் தழுவி

     உயிர்விடும் விட்டிலின் காதல்

தெளிவடை யாத செய்கையோ? தனையே

     தியாகம்செய் திடுவதே காதல்!

துளிபெரு வெள்ளம் ஆவதே போன்று     

     தொடர்ந்திடும் காதலின் பார்வை

களித்திடப் போதும் தோழியே!" என்று

     காதலை விளக்கினள் சுலைகா!