பக்கம் எண் :

184


இந்தக் காதலும் வேண்டுமா?   

"பார்க்கவும் விரும்பி டாமல்

      படுந்துய ரேனும் சற்றுத்

தீர்க்கவும் உதவி டாமல்,   

      சிறிதள வேனும் சாந்தி

சேர்க்கவும் முடிந்தி டாமல்,

      செய்வதே காத லென்றால்

பார்க்கவும் ஆகா!" தென்று

      பகர்ந்தனள் வெறுப்பாய்த் தோழி.

 

தனிமையில் நஞ்சு: இணைப்பில் தேன் !

"நானெனும் தனிமை கொண்டால்

      நஞ்செனக் கொல்லும் காதல்

தானெனும் எண்ணம் நீக்கித்

      தன்னலம் யாவும் போக்கில்

தேனெனச் சுவைக்க லாகும்;

      தெரிந்தவர் உணரக் கூடும்.

வீணுப தேசம் வேண்டாம்"

      வெடுகெனச் சுலைகா சொன்னாள்.

 

இரு உள்ளம் இணைந்தால்:...?

"இருவரின் இதயத் துள்ளும்

      எழுவதே உண்மைக் காதல்;

ஒருவரின் உள்ளம் மட்டும்

      ஒப்பிடில் காதல் அன்றே!

இருவரும் இணைந்தால் சொர்க்கம்,

      இல்லையேல் நரக மாகும்,

மறுத்திடும் யூசுப் எண்ணம்

      மாற்றுவீர்!" என்றாள் தோழி.