வாழ்க்கைக் கடலில் காதலே கப்பல் : "உடல்நலம் பெற்றி ருந்தால் உயிரதில் உலவக் கூடும். உடல் வளங் குன்ற லாயின் உயிரகன் றோடு மன்றோ? கடலெனும் வாழ்விற் காதல் கப்பலே கரையிற் சேர்க்கும். உடனவர் கூட்டிவா!" என்று உரைத்தனள் சுலைகா கெஞ்சி! வலியக் கிடைத்தால்...? "வலியவே கிடைக்கும் இன்பம் மதிப்பினில் குறைந்து போகும், வலியநாம் சென்றோ மென்றால் மாபெரும் இழிவுண் டாகும். வலியவே யூசுப் இங்கே வந்திடச் செய்வோம்!" என்று தெளியவே தோழி சொன்னாள் சீறினாள் சுலைகா பாய்ந்து. சாதனையற்ற போதனை ! "சாதனை செய்யச் சற்றும் தகுதியே இலைஎன் றாலும் போதனை செய்ய மட்டும் புறப்படு கின்றாய், என்னுள் வேதனை வளர்க்க வேண்டாம் விரைவினில் சென்று என்றன் நாதனை அழைப்பாய்!" என்று நவின்றனள் தோழி நோக்கி. |