பக்கம் எண் :

186


கதிரவன் உதித்தான் :

"எப்படி யேனும் கூட்டி

      இங்குடன் வருவேன்" என்று

செப்பிய படியே தோழி

      சென்றனள். சுலைகா நெஞ்சில்

கப்பிய இருளை நீக்கக்

      கதிரவன் உதயம் போன்று;

ஒப்பரும் யூசுப் வந்தார்,

      ஓடியே காலில் வீழ்ந்தாள்!

 

உன்னை மறப்பதா, என்னைக கெடுப்பதா?

தன்னையே மறந்து தாளைத்

      தழுவிடும் சுலைகா செய்கை

முன்னமே அறியா யூசுப்

      முகத்தினைச் சிவக்க வைக்க,

"உன்னையே உணர்ந்தி டாமல்

      உலகமே நகைக்கும் வண்ணம்

என்னையே கெடுப்ப தற்கு

      எண்ணினை யோ"என நகர்ந்தார்.

 

அடிமை என்றால் அநீதியும் செய்வதா?

"எதற்குநீர் தயங்க வேண்டும்?

      இங்கெவ ரேனு மில்லை!

இதற்குமேல் துன்பம் தாங்க

      எனக்கி யலாது!" என்றாள்.

"அதற்குயான் என்ன செய்வேன்?

      அடிமையாய் விட்ட தென்றால்

எதற்குமே இணங்க லாமோ?"

      என்றெதிர் நடந்தார் யூசுப்!