| அடிமையன்று; அரசர் : "எனக்குநீ ரடிமை என்ற ஏவல்செய் திடவா பெற்றேன்? எனக்குநீ ரரசர் ஆவீர், என்னகம் உமது செங்கோல்! கணக்கிலாத் தங்க முங்கள் காதலுக் கேகொ டுத்தேன். எனக்குநீர், உமக்கென் றென்னை இறைவனே படைத்தான்!" என்றாள். அழியும் அழகைக் காதலிப்பதா? "அழிவுறும் அழகுக் காக அடிமையைக் காதலி த்தால் பழிவரும்!" என்று யூசுப் பயந்தனர் கதவைச் சாத்தி "இழிவிதை அன்றி வேறு எனக்கிலை" என்ற வாறு வழியினை மறைத்து நின்று வடித்தனள் சுலைகா கண்ணீர்! ஆசைத்தீயை வளர்ப்பதா? "நினைத்திடவும் கூடாத இழிசெயலைப் புரிவதனால் நெஞ்சின் வேட்கை அணைத்திடவும் ஆகாது; அல்லாது பெருநெருப்பாய் அதுவே மாற்றும். எனைத்தினமும் வேண்டுவதால் இணங்குதற்கு இயலாது!" என்றார் யூசுப் "உனைத்தவிர மற்றவரை என்னுள்ளம் ஒப்பவிலை, உண்மை!" என்றாள்! |