பக்கம் எண் :

188


வெறுப்போரை விரும்புவதா?

"எவ்விதத்தில் உங்கள்மனம் எனைமிகவும்

      விரும்புவதாய் இயம்பி னீரோ,

அவ்விதத்தில் மிக அதிகம் எனதுமனம்

      நெறியினுக்கு அஞ்சு தென்பேன்.

இவ்விதத்தில் மீண்டுமெனை வற்புறுத்தில்

      அமைச்சரிடம் இயம்ப நேரும்

ஒவ்வுதற்கு மறுப்பவனை வருத்தாதீர்!"

      எனயூசுப் உரைக்க லானார்!

கனவிலேன் வரவேண்டும்?

"யாதொன்று மறியாத என்கனவில்

      எதற்காக முன்னர் வந்தீர்?

தீதென்று எனைமறுக்கும் செம்மலே

      அதுகொடிய தீமை யன்றோ?

வாதென்று மறுக்காது வாழ்வளிப்பீர்!"

      எனச்சுலைகா வருந்திக் கேட்க,

"யாதொன்றும் நானறியேன்; கனவென்னும்

      நிலையறியேன்!" என்றார் யூசுப்.

 

அனைத்தும் காதலரே!

"உங்கள்முகம் அல்லாமல் வேறுமுகம்

      என்கண்கள் உவப்ப தில்லை;

உங்கள்புகழ் அல்லாமல் வேறுபுகழ்

      என்நாவு உரைப்ப தில்லை;

உங்கள்நினை வல்லாமல் வேறுநினை

      வென்நெஞ்சில் உதிப்ப தில்லை.

உங்கள்துணை பெற்றிடவே இங்குவந்தேன்!"

      எனச்சுலைகா உருகிச் சொன்னாள்.